Kongu Veerargal
- Home
- About Kongu
- Kongu Veerargal
கொங்கு வீரர்கள்
சூர்ய காங்கேயன்-முத்துசாமி கவுண்டர்
மோரூர் பட்டகாரரான சூர்ய காங்கேயன் தனது சகோதரரான கன்னிவாடி மும்முடி முத்துசாமி கவுண்டரை பாலகம் முதல் காத்து வளர்த்த நல்லராண்டியை கவுரவிக்கும் மோரூர் நாட்டின் 60 காங்கேயர்களோடு 61வது காங்கேயராக நல்லராண்டி என்னும் கொங்கு பண்டார சாதியை சேர்ந்தவரை தனது நாட்டின் பட்டகாரராக அறிவித்தார். அதற்கு அவரது பங்காளிகளான 60 கோயில்களைச் சேர்ந்த கண்ண கூட்டத்தவர்களான காங்கேயர்களும் (கன்னன் கூட்டம் அனைவருமே தங்கள் சகோதரனுக்கு அளிக்கப்பட காங்கேயன் பட்டம் கொண்டிருந்தனர்) கையொப்பமிட்டு தங்கள் பங்காளி ஒற்றுமையை காட்டினர்.
தீரன் சின்னமலை சகோதரர்கள்
சாமானிய விவசாய குடும்பத்தில் பிறந்து தனது வீரத்தால் பட்டக்காரரான பழையகோட்டை தீர்த்தகிரி சர்க்கரை மன்றாடியாரை (தீரன் சின்னமலை) அனைவரும் அறிவோம். ஆனால் அவரின் சகோதரர்களை மிக குறைவாகத்தான் அறிவோம். குழந்தைசாமி, குட்டிசாமி, கிலேதார் உள்ளிட்ட தீர்த்தகிரியின் சகோதரர்கள் வீரத்தை ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள். சகோதரர்களில் இருவர் தங்கள் வெள்ளாமையை பார்த்துக்கொள்ள மற்றவர் அனைவரும் தீர்த்தகிரியின் தலைமையில் காவல், பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டனர். கடைசி வரை தனது சகோதரர் முயற்சிகளுக்கு உறுதுணையாகவும், வார்த்தை மீறாமல் கட்டுப்பட்டும் இருந்த தீர்த்தகிரி சகோதரர்கள் இறுதி மூச்சுவரை தங்கள் ஒற்றுமையை கைவிடவே இல்லை! ஒற்றுமையாக இருந்ததால்தான் பல வெள்ளைகாரர் ஆதரவு நபர்களை போராடி வெற்றி பெற்று நீக்கிவிட்டு புதிய பட்டக்காரர்களை நியமித்து கொங்குநாட்டை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.
காளிங்கராயன் பங்காளிகள்
பவானி எலவமலை செல்லாண்டியம்மனை காணியாச்சியாகக் கொண்டவர் கால்வாய் வெட்டிய காளிங்கராய கவுண்டர். வெள்ளோடு கனகபுரதுக்கு வாழ வந்த அவர் வாழ்வின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனது பங்காளிகளின் துணை பெற்றார். வாழ்வின் ஒவ்வொரு முயற்சிக்கு பின்னும் அவரது பங்காளிகளின் உழைப்பு இருந்தது. இறுதியில் பொள்ளாச்சி ஊற்றுகுளி சென்று ஜமீன் அமைத்த பின்பும் அவர் பங்காளிகள் அவர் பின்சென்று தங்கள் சகோதர ஒற்றுமையை நிலைநாட்டினார்கள்.
அண்ணன்மார்
ராமர் லட்சுமனருக்கு இணையான அண்ணன் தம்பி பாசம் உடையவர்கள் பொன்னரும் சங்கரும். சின்னண்ணன் சங்கரின் கோபாவேசம் பெரியண்ணன் பொன்னரின் ஆணைக்கு கட்டுப்பட்டு அடங்கும். இறுதியில் சின்னண்ணன் மறைவுக்கு பின் பெரியண்ணன் துயராற்றாது பாடும் பாடலை கேட்டால் உருகாத மனமும் உருகும்.
“மண்ணிழந்தேன் மனையிழந்தேன் மாணிக்கத்தை நானிழந்தேன்!..
பொன்னிழந்தேன் பொருளிழந்தேன் புலிக்குட்டி சங்கரையும்
நானிழந்தேன்!…””
என்று தனது தம்பியின் பிரிவாற்றாது தான் உயிரையும் மாய்த்து கொள்கிறார் பெரியண்ணன் சங்கர்.
இப்படி இருந்த நம் கொங்கதேச அண்ணன் தம்பி பாசம் இன்று தவறாக சித்தரிக்க பட காரணம் என்ன..? நம் கலாசார மரபுகளை விட்டு விலகி சென்றதே காரணம். ஆயிரம் இருந்தாலும் நம் அண்ணன்-அய்யனுக்கு அடுத்த ஸ்தானம். ஆயிரம் இருந்தாலும் நம் தம்பி – பெற்ற முதல் மகனை போல என்ற எண்ணம் நம் அனைவர் மனதிலும் வர வேண்டும். நம் பங்காளிகள் அனைவரும் நம் சுக துக்கங்களிலும் பங்காளிகள். உறவுகளை போற்றுவோம்.