கொங்கு நாட்டில் முதலில் குடியேறிய வேளாண் பெருமக்கள் தங்கள் குலகுருவுடன் வந்தனர் என்று பட்டயங்கள் கூறுகின்றன, 24 நாடுகள் பிரித்து நாட்டுக்கு ஒரு குலகுருவாக 24 பேரை நியமித்தனர், பின் நாடுகளும் குடிகளும் பெருகப்பெருக குருக்களும் பெருகினர் என்பதை பல செப்பேடு பட்டயங்கள் உறுதிப்படுத்துகின்றன. உடல், பொருள், ஆவி மூன்றையுமே குலகுருவாக்கு தத்தம் செய்து கொங்கு வேளாளர்கள் பட்டயம் எழுதி தந்துள்ளனர். வாரிசு இல்லாத சொத்து குருவுக்கே என்று எழுதித் தந்தனர். குருக்கள்புரம், குருக்கள்பாளையம், குருக்கள் ஊர், குருக்கள் வலசு போன்ற ஊர்களைக்கொண்டு குருக்களுக்கு தனி ஊர் பகுதிகளை கொடையாக அளித்தது தெரியவருகிறது. சோழநாட்டில் சிவ பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட சதுர்வேத மங்கலங்களை விட கொங்கு நாட்டில் குருக்களுக்கு அளிக்கப்பட்ட ஊர்கள் அதிகம்.