கொங்கு வேளாளர்களும் - தமிழும் - புலவர்களும்

செம்மொழியாம் தமிழ் மொழியை காலம் தோறும் வளர்த்து வாழ வைத்ததில் கொங்குநாடு எந்த நாட்டுக்கும் சளைத்தது அல்ல, கொங்கு நாட்டின் பங்கு ஒருபடி அதிகமாகவே இருந்தது எனலாம். சங்ககாலத்தில் அந்தி இளங்கீரனார், பொன்முடியார், பெருந்தலைச் சாத்தனார், குடவாயில் கீரத்தனார், காக்கை பாடினியார், இவர்கள் முறையை அந்தியூர், பொன்முடி, பெருந்தலையூர், கொடுவாய், காகம் போன்ற ஊர்களில் வசித்துள்ளனர். கரூரில் மட்டுமே பத்துப் புலவர்கள் வசித்து வந்ததாக  சரித்திரம் கூறுகிறது. தமிழில் ராமாயணமும் மகாபாரதமும்  இயற்றப்படுவதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர்கள் கொங்கு வேளாளர்கள். இடைக்காலத்தில் கொங்கு நாட்டை தவிர வேறு எங்கும் பெண்பாற்புலவர்கள் இருந்தது கிடையாது.

இன்று கிடைத்துள்ள ஒரே ஒரு சங்ககால இசைத்தமிழ் நூல் ‘பஞ்சமரபு’ அது கொங்கு நாட்டில் தான் கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே தொன்மையான இசை, நாட்டியம் பற்றிய கல்வெட்டு கொங்குநாட்டு அரச்சலூரில் தான் கிடைத்துள்ளது. திருக்குறள்  பற்றி உரை நூல்களும் இங்குதான் அதிகம் கிடைத்தன, திருக்குறள் கல்வெட்டு கொங்குநாட்டு மல்லூரில் தான் கிடைத்தது, கொங்கு நாட்டு குறுநில மன்னர்கள்தான் வள்ளுவர் மரபு காத்து அரசு புரிந்ததாக கூறுகின்றனர், தமிழ் நாட்டு மன்னர் எவரும் இவ்வாறு ஆட்சி நடத்தியதாக அறியப்படவில்லை. தமிழகமெங்கும் போட்டியில் வெற்றி பெற்று கொடி நாட்டிய தொண்டைநாட்டு ‘படிக்காசுப் புலவர்’ கோயம்புத்தூர் கோவில்பாளையம் தமிழ் சங்கத்தில் தோல்வியடைந்து தன் பரிசுகளை எல்லாம் இழந்தார் என்பது சரித்திரம். கொங்கு நாட்டு மக்கள் புலவர்களையும் நாட்டிய கலைஞர்களையும் முன்னிலைப்படுத்தியே தங்களுடைய மங்கலச் சடங்குகள் அனைத்தையும் செய்தனர். கொங்கு பெருமக்கள் வீடுகளில் எப்பொழுதும் புலவர்கள் இருந்தனர். நம்முடைய கல்யாண சீர்களில் புலவர் பால் அருந்துதல் என்ற ஓர் சீர் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி புலவர்கள் இருந்துள்ளனர். கொங்கு மண்டலத்தின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை, புலவர் அம்பிகாவதி புலவருக்கு பொற்காசுகளால் கனகாபிஷேகம் செய்துள்ளார், பொன்னாலும் வெள்ளியாலும் மணிகள் பதித்து செய்யப்பட்ட நடைவண்டியை, தான் நடை பயிலும் போதே கொடையாகக் கொடுத்து “நடைபெற்றபோதே கொடை கற்றவன்” என்ற பாராட்டைப் பெற்றவர் பல்லவராயன் மகன். நீண்ட நாள் நோயின்றி வாழ வைக்கும் கருநெல்லிக்கனியை தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தார் அதியமான், கொங்கு வேளாளர் தமிழ் வளர்ப்பதில்  அவர்களுக்கு நிகர் அவர்களே என்று சொல்லும்படி வாழ்ந்தவர்கள். கவிச்சக்கரவர்த்தி கம்பரோடு பெரும் தொடர்புடையவர்கள் கொங்கு வேளாளர்கள். கம்பரை அனாதை சிறுவனாக எடுத்து வளர்த்தவர் சடையப்ப வள்ளல் என்று சொல்லக்கூடிய  கொங்குவேளாளர். கொங்கு வேளாளர் பெருமக்கள் கம்பரையும் அவர் கவிதைகளின் நயத்தையும் கண்டு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர்கள், அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது மட்டுமல்ல கம்பரின் பல்லக்கைச் சுமந்தனர், கம்பரின் பாதச்சுவடுகள் என்னும் செருப்பை தங்கள் தலை தாங்கினர், கம்பர் எச்சில் துப்பும் காளஞ்சிப் பாத்திரத்தை எந்தினர் ஒரு சமுதாயமே புலவருக்கு இவ்வாறு உயர் மதிப்பு அளித்து தமிழை வளர்க்க பாடுபட்டது கொங்கு வேளாளர் பெருமக்கள் தவிர உலகில் வேறு எங்குமே கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஒரு நாள் சோழ மன்னன் கம்பருக்கு பரிசு வழங்கினார் கம்பர் பரிசை இடது கையை நீட்டி பெற்றார், மன்னர் அதிர்ச்சியடைந்து காரணம் கேட்டபோது கொங்கு வேளாளர்கள் அளிக்கும் பரிசை மட்டுமே வலது கையை நீட்டி வாங்குவேன் என்று கூறினாராம். இன்னும் எத்தனையோ சிறப்புகளை கூறவேண்டும்.