கொங்குநாடு

நம் செந்தமிழ் நாடு சேர சோழ பாண்டிய மண்டலங்களை உள்ளடக்கியதாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் உண்மையிலேயே ‘வியன் தமிழ்நாடு  ஐந்து’என்று தண்டியலங்காரமும் ‘தமிழ் மண்டலம் ஐந்து’ என்று திருமூலரின் திருமந்திரமும் கூறுகிறது, ஆகவே நம்முடைய செந்தமிழ் நாடு சேர, சோழ, பாண்டிய, தொண்டை மற்றும் கொங்கு மண்டலங்களை உள்ளடக்கியது.  அவ்வை பிராட்டி மண்டலங்களின் சிறப்பைக் கூறும் போது சேர நாடு வேழம் உடைத்து, சோழ நாடு சோறுடைத்து, பாண்டிய நாடு முத்து உடைத்து, தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்று கூறியவர், கொங்கு மண்டலம் என்று வரும்போது கொங்கு மண்டலத்தின் சிறப்பாக அவர் கூறியது கொங்குநாடு பண்புடைத்து என்று கூறுகிறார்.  ஆக நம்முடைய கொங்குநாடு அந்நாளிலேயே எத்தகைய பண்பாட்டு மிளிர்சியோடு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. 

கொங்கு 24 நாடுகள்

கொங்குநாடு எப்பொழுதும் தனக்கென்று தனி எல்லைகளையும், வரலாறு, கலை, பண்பாடு, நாகரீகம், பழக்கவழக்கங்கள் ஆகியவைகளை கொண்டிருந்ததாக பல கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மற்றும் இலக்கியங்கள் மூலமாகவும் உணர முடிகிறது. அந்நாளில் கொங்கு நாடு 24 உள்நாடுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வந்திருக்கிறது.

கொங்கு குறுநில மன்னர்கள்

கொங்குநாட்டு குறுநில மன்னர்கள் அத்தி, அதியமான்,ஆய், ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன், ஏற்றை, ஓரி, கங்கன், கட்டி, கடியநெடுவேட்டுவன், குமணன், கொடுமுடி, கொண்கானங்கிழான்,  தாமான், தோன்றிக்கோன், நன்னன், பழையன், பூந்துறை பேகன் விச்சிக்கோ இன்னும் எத்தனையோ சிற்றரசர்கள் புலவர்களால் பாடப்பட்ட புகழுடையோராக  விளங்கியுள்ளனர்.

கொங்கின்சிறப்பு

வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட கால நாகரீகத்தை விளக்கம் தொல்பொருள்கள் கொங்கு நாட்டில் தான் மிகுதியாக உள்ளன.

பன்னிரண்டு ஆறுகளில் 90 இடங்களில் அணை தேக்கி, காடு கொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கி, கோயிலோடு குடிமக்களுக்காக ஊர் ஏற்படுத்தியவர்கள் கொங்கு மக்கள்.

தில்லைப் பொன்னம்பலத்தில் எத்தனையோ பேர் பொன் வேய்ந்தாலும் முதலில் பொன்வேய்ந்த ‘ஆதித்தன்’ கொங்கு நாட்டு பொன்னைக் கொண்டு பொன்வேய்ந்தான் என்று சைவத்திருமுறை கூறுகிறது. பொன் நாடு தான் கொங்கு நாடு ஆயிற்று, கொங்கு என்ற சொல்லுக்கே பொன் என்ற பொருளும் உண்டு.

அளவு கருவிகளுக்கு கூட ‘கொங்குநாழி’ ‘கொங்கு முறம்’ என்று பெயர் வைத்து மகிழ்ந்தவர்கள் கொங்கு மக்கள். கொங்கின் மீது பற்றுக் கொண்ட காரணத்தால் ஒரு புலவர் எப்படிப் பாடுகிறார் என்று பாருங்கள் ‘கொங்கத்தின் மண்ணே சுகம் தரும் அல்லால் வேறு கோருவோர் அறிவு குறையும்’ என்கிறார். ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ ‘கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்’ ‘கொங்கில் வாழான் எங்கும் வாழான்’ ‘கொங்கு அழிந்தால் எங்குமழியும்’ என்பது முதுமொழி.